சென்னை: பேராசிரியர் க. அன்பழகன் மறைவால் திமுகவின் அதிகாரமிக்க பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி காலியாகியுள்ளது. 1977ஆம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது, கருணாநிதி தனது சகா க.அன்பழகனை பொதுச் செயலாளராக ஆக்கினார். அன்று தொடங்கி 2020 மார்ச் 6ஆம் தேதி வரை பேராசிரியர் அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்துவந்தார்.
கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும் எனபதால், புதியவரை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. திமுகவின் கட்சி விதிகளின்படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறது.
திமுகவின் உட்கட்சி தேர்தல் தற்போதுதான் தொடங்கியுள்ளதால், அது முடிவதற்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு ஒருவார காலம் துக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில், அது முடிந்தவுடன் உயர்மட்டக்குழுவை கூட்டவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழுவை கூட்டவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொருளாளர் பதவிக்கு கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் பொன்முடி ஆகியோரும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள திமுக அரசியல் வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளைப் பெற்றுவருகிறது.
பிரஷாந்த் கிஷோரின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற தென் மாவட்டங்களில் கட்சியின் பிடியை வலுப்படுத்துவதில் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சிக்குள் போட்டாபோட்டி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

