சேலம்: உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பெண்களை கௌரவிக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
'அனைவரும் சமம்' என்ற கருப்பொருளை முன்வைத்து இந்த ஆண்டு தெற்கு ரயில்வே மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகிறது. அவ்வகையில் மகளிர் மட்டும் இயக்கிய ரயில்கள் ஓடின.
சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயிலை மகளிர் மட்டுமே இயக்கினர்.
இந்த நிலையில், கோவையில் இருந்து பெங்களூருவுக்குச் செல்லும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள், கட்டணச்சீட்டு பரிசோதகர்கள் என அனைவரும் மகளிர் என்ற நிலையில் இயக்கப்பட்டது.
கோவையில் அந்த ரயில் புறப்படும்போது, பெண் ஓட்டுநர்களை பயணிகளும் பெண்களும் உற்சாகப்படுத்தினர். இதையடுத்து அந்த உதய் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு காலை 7.50 மணிக்குச் சென்று சேர்ந்தது. அப்போது அவர்களுக்கு ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதே போல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கும், உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கும் ஏர்இந்தியா விமானங்களை மகளிர் மட்டுமே இயக்கினர்.

