வாசன்: எம்பி பதவி கிடைக்க பாஜகவின் தயவல்ல காரணம்

வாசன்: எம்பி பதவி கிடைக்க பாஜகவின் தயவல்ல காரணம்

2 mins read
9a87f387-76b0-46b1-8808-d1682f081e10
இடமிருந்து: அதிமுக சார்பில் வேட்பாளர் களாக அறிவிக்கப் பட்டுள்ள கே.பி.முனுசாமி, சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். படம்: ஊடகம் -

சென்னை: சட்டசபையில் முக்கியத்துவம் இல்லாத தமாகாவுக்கு அதிமுக திடீர் அங்கீகாரம் அளித்துள்ளதன் காரணமாக ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்துள்ள வாசனும் அவரது கட்சியினரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

"நான் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவி செய்ததாக சிலர் சொல்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.

"அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களின் தேர்வு முழுக்க முழுக்க அதிமுக தலைவர்களின் தேர்வாகும்," என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்பிக்களைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் தற்போதுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கைஅடிப்படையில் அதிமுக - திமுக சார்பில் தலா மூன்று எம்பிக்களைத் தேர்வு செய்யமுடியும்.

கூடுதலாக வேட்பாளர்களை களம் இறக்கினால் மட்டுமே மார்ச் 26ல் தேர்தல் நடக்கும்.

இல்லையெனில் ராஜ்யசபா தேர்தலில் இந்த ஆறு எம்பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியாகும்.

முன்னதாக திமுக சார்பில் மூவர் மனுத்தாக்கல் செய்த நிலையில், நேற்று அதிமுக சார்பில் மூவ ரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 13ல் நிறைவடைகிறது. மனுவை வாபஸ் பெற மார்ச் 16ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அன்று முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர்.

இந்நிலையில், "பாஜக வின் தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெறவில்லை. தமாகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நான் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன்," என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான தம்பிதுரை, முனுசாமி ஆகியோர் மற்ற இரு வேட்பாளர்கள். கடைசிவரை எம்பி பதவிக்காக முட்டி மோதிய தேமுதிகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

திமுக சார்பில் தற்போதைய எம்.பி. சிவா, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.