விமானநிலையத்தில் 2.21 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்

விமானநிலையத்தில் 2.21 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்

1 mins read

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய இரு வேறு சோதனை நடவடிக்கைகளில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள தங்கமும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணமும் சிக்கின.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 8:40 மணிக்கு டெல்லி வழியாக பாரிஸ் நகருக்குச் செல்லும் 'ஏர் இந்தியா' விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த பவ்சுல் கரீம், 21, திருச்சியைச் சேர்ந்த சையத் அஜீஸ், 22 ஆகிய இருவரது உடைமைகளையும் சோதனையிட்டபோது அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதைக் கண்டுபிடித்தனர்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.21 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல வந்த சென்னையைச்சேர்ந்த முகமது ஹக்கீம், 41, பீர் மைதீன், 40, ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூ.14,32,000 மதிப்புள்ள யூரோ கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.