தேர்வுக்கு பயந்து தன்னைக் கடத்தியதாக மாணவி நாடகம்

1 mins read
352c2505-42d3-47a0-95a8-e3713fd1e324
-

பெரம்பூர்: பிளஸ்-2 தேர்வை எழுதுவதற்கு பயந்து தன்னை யாரோ சிலர் கடத்திவிட்டதாக நாடகமாடிய பெங்களூரு மாணவியை போலிசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

சென்னை பூக்கடை போலிஸ் நிலையத்துக்கு மாணவி ஒருவர் காலில் செருப்பு அணியாமல் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்து, தன்னை யாரோ கடத்திவிட்டதாகவும் அவர்களது அடையாளம் தெரியவில்லை என்றும் புகார் அளித்தார்.

"எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, பெங்களூரில் இருந்து காரில் என்னை சென்னைக்கு கடத்தி வந்தனர்.

"இங்கு மற்றொரு காரில் என்னை மாற்றியபோது அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்து விட்டேன். என் தந்தையிடம் பணம் பறிக்கவே என்னை சிலர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்," என்றார்.

இதையடுத்து போலிசாரின் விசாரணையில் மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து கடத்தல் நாடகம் ஆடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பெங்களூருவில் உள்ள மாணவியின் பெற்றோரை சென்னைக்கு வரவழைத்து விசாரித்ததில், மாணவி பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் சரிவர படிக்காததால் தேர்வுக்கு பயந்துகொண்டு சென்னைக்கு ஓடிவந்து, கடத்தல் நாடகமாடி போலிசாரை அலைக்கழித்தது தெரியவந்தது. மாணவியைப் போலிசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பினர்.