30 ஆண்டுகால இழுத்தடிப்பு முடிவுக்கு வருமா? ரஜினி அறிவிப்பை எதிர்பார்த்து பரபரப்பு

2 mins read
3a8ff81c-ffc6-4023-9a44-df0cf0a2ae8f
நடிகர் ரஜினிகாந்த், நாளை (மார்ச் 12) தன்னுடைய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை விடுக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: இணையம் -

தமிழ்நாட்டு அரசியலில் 30 ஆண்டு காலமாக நிலவி வரும் ஓர் எதிர்பார்ப்பு நாளை கைகூடும் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், நாளை (மார்ச் 12) தன்னுடைய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை விடுக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கும் ரஜினி, அண்மைய நாட்களாக அரசியல் காய்களை மும்முரமாக நகர்த்தி வருகிறார்.

ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்து இருக்கும் அவர், அந்த மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து சந்தித்து பலவற்றையும் விவாதித்து வருகிறார்.

இதனையொட்டி நாளை காலை சென்னையில் அவர் மேலும் ஒரு கூட்டத்தை நடத்துவார் என்றும் அதற்குப் பிறகு அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்றைய சந்திப்பை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்பை அடுத்து தன்னுடைய அரசியல் திட்டத்தை ரஜினி அறிவிக்கப் போகிறார் என்று பல தரப்புகளும் கூறுகின்றன.

இப்போது மாநிலத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் அரசியலில் நிலைத்திருக்க வியூகம் வகுத்து வருகிறார்கள்.

அதேவேளையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஓர் ஏற்பாட்டை அவர் உருவாக்க வேண்டும் என்று ரஜினி ஆதரவாளர்களும் ரசிகர்களும் ஏறக்குறைய ஒரு தலைமுறையாக வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் திமுகவின் இமாலயத் தலைவர் கருணாநிதி, அதிமுகவின் இரும்புத் தலைவி ஜெயலலிதா ஆகியோர் இருக்கும் வரை அரசியலில் எதையுமே செய்ய முடியாது என்று ஒதுங்கி இருந்து வந்த ரஜினிகாந்த், அந்த திராவிட தலைவர்கள் இல்லாத இந்தக் காலகட்டத்தில் அரசியலில் குதிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான அரசியல் களத்தை அமைத்துக் கொள்ளும் விவேகத்துடன், இஸ்லாமியத் தலைவர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகளை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக நேற்று, தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசரை அவர் சந்தித்தார்.

இந்நிலையில், திரைப்படத் துறையில் சாதித்ததைப் போல அரசியலில் ரஜினிகாந்த் பெரும் சாதனைகளை உடனடியாக நிகழ்த்துவது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்று அரசியல் களத்தில் ஆரூடப் பேச்சுகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன.

#ரஜினி #அரசியல் அறிவிப்பு

குறிப்புச் சொற்கள்