சென்னை: முதல்வர் பதவி மீது எனக்கு ஒருபோதும் நாட்டம் ஏற்பட்டது இல்லை. அப்பதவி எனக்குத் தேவையும் இல்லை. இளைஞராக, படித்தவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவராக இருப்பவரையே முதல்வர் நாற்காலியில் அமரவைக்க வேண்டும் என்று 69 வயது நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினி கூறுகையில், "கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் எனது அரசியல் நிலைப்பாடு.
"கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, முதல்வர் பதவி வேண்டாம் என்று நான் கூறியதை நிர்வாகிகள் பலரும் ஏற்கவில்லை. இதையே நான் ஏமாற்றம் மிஞ்சியதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
"நீங்கள் முதல்வர் ஆகாவிடில் அரசியல் எடுபடாது என்றனர்.
"அரசியலில் எம்எல்ஏ, அமைச்ச ராகி அழகு பார்ப்பது எனக்குப் பிடிக்காது. தலைமை சொல்வதை கேட்பவர்கள்தான் தொண்டர்கள். நான் முதல்வராக வேண்டும் என சொல்வதை ரசிகர்கள் முதலில் நிறுத்தவேண்டும்.
"1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னேன் என்று சொல்வது தவறு. 2017க்கு முன்புவரை நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறவில்லை.
"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலமைப்பு முறை சரியில்லை என்றுதான் கூறினேன்.
"இந்த முறையை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் சமைப்பது போன்றதாகும்.
"படித்தவர்கள், சிந்தனையாளர்கள், தன்மானம் உள்ளவர்களை முதல்வராக அமரவைப்போம்.
"முதல்வர் பதவியில் நாம் அமரவைக்கும் தலைவர், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில் அவரைத் தூக்கி எறிவோம்.
"கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்க வேண்டும்.
"மக்களில் சிலரிடம் இன்னும் அரசியல் விழிப்புணர்வு இல்லை. மக்கள் அலைக்கு முன்பாக அசுர பலம் ஒன்றுமில்லை.
"50% பெண்களில் 20% பெண்கள்தான் யோசித்து வாக்களிக்கிறார்கள். 30% பெண்கள் அறிவில்லாமல் வாக்களிக்கிறார்கள். யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதுகூட தெரியவில்லை," என்றார் ரஜினி.
"சில பெண்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. அரசியலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற தெளிவில்லை என கூறி இருந்திருக்கலாம். அதை விட்டு விட்டு சர்வ சாதாரணமாக அறிவில்லை எனக் கூறிவிட்டார். அரசியல் என்றால் ஒரு பக்குவம் வேண்டும். ஆனால் இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பிலேயே ரஜினி உளறியுள்ளார் என்றால் கட்சி மாநாடு, பொதுக் கூட்டங்களில் எப்படி பேசுவாரோ என்பதை நினைத்துப் பார்க்கவே பேரதிர்ச் சியாக உள்ளது," என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.