கொவிட்-19 உலகளவில் பரவும் தொற்றுநோயாக அறிவிப்பு

கொவிட்-19 உலகளவில் பரவும் தொற்றுநோயாக அறிவிப்பு

2 mins read
415cd66b-753f-460b-9939-9b7de2805568
வூஹான் தியன்ஹே அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு ஸ்கூட் விமானத்தில் ஏறுவதற்கு முன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் முகக்கவசங்களை வழங்குகின்றனர். படங்கள்: வெளியுறவு அமைச்சு -

கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் அதிவேகத்தில் பரவி வருவதுடன் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் கிருமியின் ஆபத்தை விவரிக்கும் வகையில், உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் பரவும் தொற்றுநோயாக நேற்றுமுன் தினம் அறிவித்துள்ளது.

வைரஸ் கிருமி மக்களிடமிருந்து மக்களுக்கு எளிதாக பரவினால் அது தொற்று எனப்படுகிறது.

இதற்கு முன்2009ல், எச்1என்1 வைரஸ் கிருமியால் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சலை உலகத் தொற்றுநோயாக உலக சுகாகார நிறுவனம் அறிவித்திருந்தது. இத்தொற்றால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

நேற்று காலை நிலவரப்படி இதுவரையில் 114 நாடுகளில் மொத்தம் 1,18,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், உடனடி சிகிச்சை முறையை மேம்படுத்தவும், இக்கிருமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்கவும் அனைத்து நாடுகளிடமும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய பல நோய்கள் பல்வேறு காலங்களில் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1918ல் பரவிய 'ஸ்பானீஷ் ஃப்ளூ' என்றழைக்கப்பட்ட எச்1என்1 வைரஸ் காய்ச்சல் கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்களைப் பலிகொண்டது. குறிப்பாக 15 வயது முதல் 34 வயதுக்குப்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஏஷியன் ஃப்ளூ 1957ல் சிங்கப்பூரில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இதில் உலகம் முழுவதும் 11,00,000 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்றால் சீனாவில் அதிக அளவாக 3,169 உயிரிழப்புகளும், 80,793 பேருக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சமீபத்தில் நோய் பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் சுமார் 12,000 பேரும், ஈரானில் 9,000 பேரும், தென் கொரியாவில் சுமார் 7,800 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே இத்தாலியில் 827 பேரும், ஈரானில் 354 பேரும், தென் கொரியாவில் 66 பேரும், ஸ்பெயினில் 55 பேரும், பிரான்சில் 48 பேரும், அமெரிக்காவில் 38 பேரும் உயிரிழந்துள்ளனர்.