சென்னை: அண்மையில் ரஜினி அளித்த பேட்டி குறித்து பேசிய நடிகர் வடிவேலு, "2021ஆம் ஆண்டு நான்தான் முதல்வர் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் உள்ள சுப்ர மணியன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை வடிவேலு சந்தித்தார்.
அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு வடிவேலு, "ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, ஏன், அவருக்கே தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்," என்று நகைச்சுவையாக கூறினார்.
"2021 ஆம் ஆண்டு நான் சி.எம் ஆகலாம்னு பிளான் பண்ணியிருக்கேன். நான் தேர்தல்ல நின்னா நீங்கல்லாம் ஓட்டுப் போடுவீங்கள்ள. அப்ப நான்தான் சிஎம்மு," என்றும் அவர் சொன்னார்.
சென்ற வியாழக்கிழமை சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப்போகும் மூன்று திட்டங்கள் குறித்துப் பேசினார். முதலாவது திட்டம், தேவை யில்லாத கட்சிப் பதவிகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது. தேர்தலுக்கு மட்டும் பதவிகளை உருவாக்கி, ஆட்சிக்கு வந்தால் அந்தப் பதவிகள் நீக்குவது. பதவிகளில் அதிகம் பேர் நியமிக்கப்பட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்கிறது.
இரண்டாவது திட்டம், 50 வயதுக்குக் கீழே இருக்கும் இளை ஞர்களுக்கு பெரும்பான்மையான வாய்ப்புகளைக் கொடுப்பது.
மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை," என்று திட்டங்களை அறிவித்தார்.
இதற்கிடையே ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சீமானும் ஒருவர்.
ஆனால் ரஜினிகாந்த் தமக்கு முதல்வராக விருப்பமில்லை என்று அறிவித்துள்ளதால் அவருக்கு சீமான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரஜினி தனது அரசியல் நிலையை தெளிவாக சொல்லிவிட்டார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
பூந்தமல்லியில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசினார்.
"நடிகர் ரஜினிகாந்த் ரொம்ப நல்ல மனிதர்.
"எங்கள் கட்சிக்கும் அவர் மீது மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. அரசியல் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தெளிவாக சொல்லி விட்டார். ஊடகங்கள் தான் இதனை பெரிதுபடுத்தி வருகின்றன," என்றார்.
ஆனால் நடிகர் எஸ்.வி. சேகர், "ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வது எல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி என இரண்டும் இருவர் கையில் இருந்தால் முதலில் கட்சியும் சின்னமும் முடங்கும்," என்று கூறியுள்ளார்.