சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் ஆற்று மணல் போதிய அளவுக்குக் கிடைக்காமல் பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தப் பற்றாக்குறையைப் போக்க வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக மலேசியாவில் இருந்து தொடர்ந்து மணலை தமிழக அரசு இறக்குமதி செய்து வருகிறது.
இதுவரையில் 4 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு மணல் தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் இருந்து 50,000 டன் மணலை ஏற்றிக்கொண்டு 10வது கப்பல் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன.
தமிழ்நாட்டில் அன்றாடம் 15,000 லாரி மணல் தேவைப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. முன்பு போல் ஆற்று மணல் மாநிலத்தில் கிடைப்பதில்லை.
தஞ்சை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் மணலை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பான வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 15 மணல் படுகைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அவற்றில் இருந்து அன்றாடம் 1,500 லாரி மணல் ஏற்றப்படுகிறது. ஒரு லாரியில் 2 யூனிட் மண் நிரப்பப்படும். அதன் விலை ரூ. 1,330 என்று அரசாங்கம் நிர்ணயித்து விற்று வருகிறது.
ஆனால் அது போல பல மடங்கு பணம் கொடுத்தாலும் மணல் கிடைப்பதில்லை என்று பரவலாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. ஆற்று மணலுக்குப் பதிலாக அண்மைய காலத்தில் கல்மணல் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற 216 கல்மணல் ஆலைகளில் இருந்து அன்றாடம் 15,000 லாரி கல்மணல் உற்பத்தி ஆகிறது. இது ஒரு யூனிட் ரூ. 5,000 வரை விற்கப்படுகிறது.
மாநிலத்தின் மணல் பற்றாக் குறையைப் போக்க 2018 அக்டோபர் முதல் வெளிநாட்டு மணல் இறக்குமதி ஆகிறது. இதுவரையில் ஒன்பது கப்பல்களில் சுமார் 400,000 மெட்ரிக் டன் மணல் வந்திருக்கிறது.
அன்றாடம் 1,500 லாரி ஆற்று மணலும் 15,000 லாரி கல்மணலும் 200 லாரி இறக்குமதி மணலும் விற்பனைக்குக் கிடைப்பதால் தமிழகத்தில் இப்போது தேவைக்கு அதிகமாகவே மணல் இருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் நடைமுறையில் வேறு விதமாக இருக்கிறது என்று கட்டுமானத் துறையினர் கவலை தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இணையம் மூலம் மணல் விற்கப்படுகிறது. மணல் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் அதிகளவு குறைந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து இருக்கிறார்கள்.
சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுக்கப்படுவதையும் விற்கப்படுவதையும் தடுக்க 24 மணி நேரம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

