நாமக்கல்: நாமக்கல் அருகே நள்ளிரவில், லாரி- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாடா சுமோ காரும் திருச்சி செல்லும் சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இரு வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. காரில் இருந்த ஆறு பேரும் மாண்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
மாண்டவர்களில் இருவர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள். நால்வர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் தப்பிவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது. தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணமாகத் தெரிகிறது என்று போலிஸ் தெரிவித்தது.

