சென்னை: பட்டப்படிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு இடையே தமிழ் வழிக்கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இதனை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
முன்னதாக தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20% முன்னுரிமை வழங்கப்பட்டது.
நேற்று தாக்கல் செய்த மசோதாவின்படி இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு பட்டப் படிப்புடன் 10, 12ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோன்று 10ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றிருக்கவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார விடுமுறைக்கு பின்பு நேற்று கூடிய சட்டப்பேரவையில் தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

