சென்னை: திமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டு முதல் திமுக வின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த க.அன்பழகன், 98, கடந்த 7ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார்.
இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற உள்ளதாக ஸ்டாலின் அறிவித் துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், "பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரைமுருகன் அளித்த கடிதம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
"இதனால் வரும் 29ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தலுடன் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை துரைமுருகன் பொதுச்செயலாளராக ஆக்கப்படால் அறிவிக்கப்படாத பொருளாளராக இருக்கும் எ.வ.வேலுவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் பொதுச்செயலாளர் பதவியை டி.ஆர்.பாலுவும் எதிர்பார்ப்பதாகவும் பொருளாளர் பதவியைக் கைப்பற்றும் முனைப்பில் பொன்முடி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் திமுகவின் நெருங்கிய வட்டார வாசிகள் கூறியுள்ளனர்.

