சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தமிழனுக்கு செய்யும் துரோகம் மன்னிக்க முடியாதது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"பிற மாநிலங்களில் அங்குள்ள மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமின்றி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டம், சிஐஎஸ்சிஇ பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகிய பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளிலும் மாநில மொழிப் பாடம் கட்டாயமாகும். மாநில மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கவும் அந்த மாநிலங்களின் உள்ளூர் மொழி கட்டாயப்பாட சட்டம் வகை செய்கிறது," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 624 சிபிஎஸ்இ பள்ளிகள் இருப்பதாகவும், மற்ற பாடத்திட்டங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழை படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்கக் கூடாது.
"எனவே, தமிழகத்திலுள்ள சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

