புதுடெல்லி: சமசுகிருத மொழிச் சட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
இது பெருங்கேடு விளைவிக்கின்ற அழிவுச் சட்டம் என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதையும் சமசுகிருத மயமாக்கி, பிற மொழிகளுக்கு இங்கே இடம் இல்லை எனச் சொல்கின்ற முயற்சி இது என்றும், இது இந்தியாவைத் துண்டுதுண்டாக ஆக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
"இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்த அரசு ஒதுக்கி இருக்கின்ற ஒட்டுமொத்தத் தொகையைவிட 22 மடங்கு கூடுதல் பணத்தை சமசுகிருதம் என்ற ஒரே மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கி இருக்கின்றார்கள். இந்த அவையில் இருக்கின்ற மராத்தி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் ஏனைய மொழிகளைப் பேசுவோர், இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?" என்று கேள்வி எழுப்பினார் வைகோ.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் சமசுகிருதமும் இந்தியும் தென்னிந்திய மொழிகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்துவிடும் என்று அவர் சாடினார்.
சமசுகிருத மொழியை எழுதப் பேசப் படிக்கத் தெரியும் என ஒரு சான்றிதழைக் கொடுக்கும் பட்சத்தில், ஒரு மாணவன் 10 அல்லது 12ஆம் வகுப்பில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று குறிப்பிட்ட அவர், அம்மாணவர், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல் என வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
"சமசுகிருத மொழியை வளர்ப்பதற்காக, 643.24 கோடி செலவில் தேசிய சமசுகிருதக் கல்லூரியைத் தொடங்கினார்கள்.
"ஆனால், எங்கள் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கியது வெறும் 4 கோடி 65 லட்சம்தான். கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய ஒட்டுமொத்தத் தொகை வெறும் 21 கோடிதான்.
"இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு, சட்டமானால் அது இந்திய ஒற்றுமையை உடைத்துத் துண்டுதுண்டாக்கி விடும். மக்கள் ஆட்சிக் கோட்பாட்டை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கின்றேன்," என்றார் வைகோ.

