சென்னை: கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு நபரும் குணமடைந்து விட்டதாக அவர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
தற்போது தமிழகத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார் அமைச்சர்.
"இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த பொறியியலாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருந்தது. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். தற்போது அவரும் குணமடைந்துவிட்டார். இந்த நிமிடம் வரை தமிழகத்தில் கொரோனாவால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை.
"உலக சுகாதார நிறுவனம் 60 அல்ல 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் வெளியில் செல்ல வேண்டாம், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
"நிச்சயமாக தமிழக அரசு மக்களை காப்பாற்றும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே மக்கள் கவலையடைய வேண்டாம்," என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் பொதுமக்கள் முகக்கவசங்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
இதற்கிடையே டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

