சென்னை: உலகையே மிரட்டி வரும் கொலைகார கொரோனா கிருமியை இரண்டில் ஒன்று பார்த்துவிடும் நோக்கத்துடன் தமிழக அரசு முழுமூச்சாகக் களத்தில் குதித்து இருக்கிறது.
அதேவேளையில், பல வெளிநாடுகளிலும் உள்ள கொரோனா நோயாளிகளுக்குத் தமிழக சிறப்பு வல்லுநர்கள், மாநிலத்தில் இருந்த படியே ஸ்கைப் இணையச் செயலி மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா உலகில் பல நாடுகளிலும் பேயாட்டம் போட்டு வருகிறது என்றாலும் தமிழ்நாட்டில் அந்தக் கிருமிகளின் ஜம்பம் இதுநாள் வரை பலிக்கவில்லை.
அந்த மாநிலத்தில் இதுவரையில் 1.89 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்துலகப் பயணிகள்.
222 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் இதுவரை மூன்றே மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா கிருமி பாதிப்பு தெரியவந்தது.
அவர்களில் 45 வயதான ஒருவர் பூரண குணமடைந்துவிட்டார். வடஇந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் அயர்லாந்தில் இருந்து வந்த மற்றோருவருக்கும் இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவருக்குக் கிருமி எப்படி தொற்றியது என்பது தெரியாததால் தமிழ்நாட்டில் சமூக தொற்றுநோயாக கொரோனா மாறிவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.
இருந்தாலும் எந்த அச்சமும் அறவே தேவையில்லை என்று அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் சுமார் 3,000 பேர் வீட்டிலேயே தனித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா கிருமியை எதிர்த்து களத்தில் குதித்துள்ள அரசு, போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் கடுமையாகப் போராடி வருகிறது.
நாட்டில் முகக்கவசம் போன்ற வையும் இதர மருத்துவச் சாதனங்களும் போதிய அளவுக்கு இருப்பதாக தெரிவித்து உள்ள அரசாங்கம், வதந்திகளை நம்பி தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு ஆலோசனை கூறி உள்ளது.
போலி செய்திகளைப் பரப்பிய மூவர் மயிலாடுதுறை உள்ளிட்ட நகர்களில் கைதாகி இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் அரசு, தனியார் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை பூச்சு மருந்து அடித்து சுத்தப்படுத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள டீக்கடைகள் உள்ளிட்ட உணவகங்கள் துப்புரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வழிபாட்டிடங்கள், திரையரங்குகள், சமுதாயக் கூடங்கள், கல்விக் கூடங்கள் எல்லாம் மார்ச் 31 வரை மூடப்பட்டு உள்ளன. பொது நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
மருத்துவச் சாதனங்களை அதிக விலையில் விற்ற கடைகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கூட்டம் குறைந்துள்ளது.
இதனால் பல ரயில், பேருந்து சேவைகள் ரத்தாகி வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் நேற்று மட்டும் 84 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் செயல்படும் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பலவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவற்றில் பணியாற்றும் 80 லட்சம் பேருக்கும் அதிக ஊழியர்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இவ்வேளையில், கொரோனா கிருமியைக் கண்டறிவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஐந்தாவது பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கியது. மேலும் மையங்கள் அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

