சென்னை: தமிழ்நாட்டை நீர்மிகு மாநிலமாக ஆக்குவதே தன்னுடைய இலக்கு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அந்த இலக்கை நிறைவேற்ற அரசு தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் என்று அவர் உறுதி கூறினார்.
இருந்தாலும் இந்த முயற்சியில் கட்சி பேதமின்றி எல்லாரும் உறுதுணையாக இருந்து கைகொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
"தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை நிலவியது. தமிழ்நாட்டை மின்மிகு மாநிலமாக ஆக்கவேண்டும் என்று அதிமுக தலைவி சூளுரைத்தார். அதை அவர் செய்தும் காட்டினார். அதையடுத்து இப்போதைய அரசு, ஜெயலலிதாவைப் பின்பற்றி தமிழ்நாட்டை நீர்மிகு மாநிலமாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளது," என்றார் முதல்வர்.
தமிழ்நாட்டில் நில வளங்கள் இருந்தும் போதிய நீர்வளம் இல்லாததால் பருவ மழையை நம்பியே மாநிலம் காலம் தள்ள வேண்டி இருக்கிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய பக்கத்து மாநிலங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் தமிழகத்துக்கு இருந்து வருகிறது.
சட்டமன்றத்தில் பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கை பற்றிய விவாதத்தில் பேசிய முதல்வர், கோதாவரி-காவேரி இணைப்பு தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மாநிலத்தில் ரூ. 692 கோடி செலவில் 133 தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
தான் மக்களுக்கான சேவகன் என்று குறிப்பிட்ட பழனிசாமி, விவசாயக் குடும்பத்தில் பிறந்த தன்னுடைய இலக்கு தமிழகத்தை நீர் மிகு மாநிலமாக மாற்றுவதுதான் என்றும் உறுதிபட கூறினார்.
இதையொட்டி தஞ்சாவூர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ. 500 கோடி செலவில் நீரேற்றுப் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர்.