புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 22 முதல் இந்தியாவில் எந்த வெளிநாட்டு விமானமும் தரையிறங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒருவார காலத்துக்கு இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பி இருந்தார் அந்த 35 வயதான இளையர். அவரிடம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஏழாவது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு திடீரென ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் படவில்லை. அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்தார் எனத் தெரியவில்லை.
இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு அங்குள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க கல்வி நிலையங்களில் மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா பீதியால் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் ஏராளமான ரயில்கள் ரத்தாகி உள்ளன. ரயில்வே துறைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக 36 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா பீதி காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நகை விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் வீடுகளில் இருந்து மதிய உணவைப் பெற்றுச் சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் டப்பாவாலாக்கள் மார்ச் 31ஆம் தேதி வரை பணியில் ஈடுபடப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பீகாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

