சென்னை: தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னை விடுவிக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி கோரியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததா என நீதிபதிகள் விரைவில் முடிவு செய்ய உள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது நளினி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நான்காவது முறையாக நளினி மனுத்தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவிலேயே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் நளினி உள்ளிட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேராகத்தான் இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
"அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, மாநில ஆளுநர் கடமையாற்ற தவறும்போது, நீதிமன்றம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். ஏற்கெனவே ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
"தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெற்ற தமிழக அரசு, இந்த ஏழு பேர் விடுதலைக்காக இதுவரை ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது," என்று வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் நளினி கைது செய்யப்பட்ட நாள் முதல் அவரை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரை செய்த நாள் வரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

