சென்னை: இந்தியாவில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை அமலாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகமும் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பொதுப் பேருந்து, ரயில்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் நேற்று முன்தினம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
"ஒன்பது அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இன்று காலை, 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். கொரோனா கிருமி தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தாதிகள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 22ஆம் தேதி (இன்று) மாலை, 5:00 மணிக்கு மணியோசை வழியாகவும் கை தட்டியும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
"இன்று காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் இயங்காது. அனைத்து அரசு, தனியார் நுாலகங்கள் 31ஆம் தேதி வரை மூடப்படும். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு எடுத்து வரும் கொரோனா கிருமி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கிருமியை வெற்றிகரமாக ஒழிக்க உதவ வேண்டும்," என்று முதல்வர் கூறியுள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,253ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
பயணிகளில் யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுகின்றனர்.
கிருமி அறிகுறிகள் இல்லாத வர்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளில் ஏற்படுத்தப் பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 24 மணி நேரம் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
அதன்பின் அவர்கள் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படு கின்றனர்.
இவ்வாறு தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப் பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 3481லிருந்து 4253க்கு அதிகரித்துள்ளது.

