சென்னை: கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள எளாவூர் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினரும் போலிசாரும் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் டிஎஸ்பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் கொரோனா கிருமி பரவல் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் ஒன்றை சோதித்த போது காரில் பெண் உள்ளிட்ட மூன்று ஜப்பானியர்கள் இருந்தனர்.
அவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஷின்யா ஹராடா(43), நசாரு நகஜிமா(57), மற்றும் நஹுமி யமாஷிடா(40) என்ற பெண் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வந்தது தெரியவந்தது.
விசாரணையில் பெங்களூரு மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் அவர்களிடம் ஆதார் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மூவரும் 'கியூ' பிரிவு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

