சென்னை: கொரோனா கிருமி பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் இன்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
இதையொட்டி தமிழக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கிருமி பரவலைத் தடுக்க தனிமைப்படுத்துவது முக்கியம் என்பதால் நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றன.
அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளைத் தவிர மற்ற பொதுப் போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்காது.
மாநிலங்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியமற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்துக் கடைகளும் வணிக வளாகங்களும் பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.
எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பொட்டலம் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.
அதே சமயத்தில் தடை உத்தரவால் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

