சென்னை: சொந்த ஊர்களுக்குச் செல்ல பலரும் முண்டியடித்ததால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை தொடங்கி எதிர்வரும் 31ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் வேலை பார்ப்பவர்களும், பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்டவர்களும் உடனடியாக சொந்த ஊர்களுக்குச் செல்ல முடிவு செய்தனர்.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். இதனால் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. வழக்கத்தைவிட குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதாக பொதுமக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
எனினும் நிலைமையைச் சமாளிக்க சென்னைக்குள் மட்டும் இயக்கப்படும் மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளையும் வெளியூர்களுக்கு இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
இதே போல் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கடந்த இரு தினங்களாக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

