மதுரை: தமிழகத்தில் முதல் கொரோனா கிருமித்தொற்று மரணம் மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க ஆடவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இறந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு, நுரையீரல் பிரச்சினைகள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "கொரோனா பாதிப்பில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்தவர் ஈரோட்டில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்.
"அதனால் அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர் மதுரையிலிருந்து எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்துள்ளோம்.
"உயிரிழந்த நபர் ஒரு கட்டட ஒப்பந்ததாரர். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நிர்வாகியாகவும் இருந்ததால் அடிக்கடி பள்ளிவாசல் சென்று வந்தார்.
"அந்த வகையில் அவர் சந்தித்த நபர்கள், நெருங்கிப் பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
"பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை நபர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அதற்கான அடையாள 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
அவர்கள் வசிக்கும் தெரு, பள்ளிவாசல், இதர பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

