ராமநாதபுரம்: கொரோனா கிருமி பாதிப்பால் உலகெங்கிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தான நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று ஒரு திருமணம் சாலையில் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கலை, திரை அரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்திலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பி.கே.சண்முகம் மகன் முருகானந்தம் (33 வயது) என்பவருக்கும், ஆர்எஸ்மங்கலத்தைச் சேர்ந்த கண்மணி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
திருமண மண்டபங்களைப் பயன்படுத்த இயலாது என்பதால், நேற்று மணமக்களுக்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில் முன்பு சாலையில் காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மணமக்களின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர். "ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எப்படியும் நாம் அழைத்தாலும் யாரும் திருமணத்துக்கு வர இயலாது. எனவே சமூக வலைத்தளங்கள் வழி விவரம் தெரிவித்து அதன் மூலமாகவே வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டோம்," என மணமக்கள் தெரிவித்தனர்.

