சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றியோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிருமித் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 211 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 15,494 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல் சாலைகளிலும் திடல்களிலும் கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளதாக தெரிவித்த அவர், வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இச்சமயம் மருத்துவர்கள், தாதியர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் அவர்களுக்குத் தினந்தோறும் 60 ஆயிரம் முகக் கவசங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் 40 வயது ஆடவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவர் கொரோனா கிருமித் தொற்றால்தான் உயிரிழந்தாரா என்பது உறுதியாகவில்லை.
குவைத் நாட்டிலிருந்து கடந்த 3ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய அவருக்கு ஏற்கெனவே மூளைக்காய்ச்சலும் கல்லீரல் பாதிப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

