சென்னை: எதிர்வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு உச்சத்தை அடையும் என்றும், அச்சமயம் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் மற்றொரு அமைப்பும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
தற்போது இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை, அங்கு கிருமித் தொற்றின் முதல் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆகிய பல்வேறு விவரங்களின் அடிப்படையில் பட்டியல் ஒன்றை அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதில் நாடு முழுவதும் 12 முதல் 25 லட்சம் பேர் வரை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 60 ஆயிரம் பேர் வரை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கொவிட்-19 நோய்த் தாக்குதல் உச்சநிலையை அடையும்போது ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் அந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.
எனினும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தாலே கிருமித்தொற்றில் இருந்து தப்பிவிடலாம் எனப் பெரும்பாலான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

