சென்னை: தமிழகத்தில் உணவகங்களும் மளிகைக் கடைகளும் 24 மணி நேரமும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொது மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா கிருமி தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும் இது ஆட்கொல்லி நோய் என்பதையும் இது மனித சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தவல்லது என்பதையும் இதை மக்கள் உணரும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைப்பதற்கும் ஏதுவாக இக்குழுக்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அரசு தெரிவித்துள்ளது.
"பெரிய காய்கறி சந்தைகள் இருக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி அல்லது பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது திடல்களில் அமைக்க வேண்டும்.
"அங்கு சமுதாய விலகல் முறைகளின்படி மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும் மருந்து கடைகளிலும் காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்றவேண்டும்," என அரசு செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி தொற்று உள்ளோர் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சேலத்தில் கர்ப்பிணிகள், முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு, மருந்துப் பொருட்கள் உரிய நேரத்தில் வீடு தேடி வர மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக உதவி மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொரோனா கிருமி பாதிப்பு தொடர்பில் அரசின் உதவிகளைப் பெற, தகவல்களைச் சொல்ல பொதுமக்களும் இந்த உதவி மைய எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

