சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை வரை தமிழகத்தில் 29 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது. இந்நிலையில் மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அரசு நேற்று அறிவித்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. எனினும் பின்னர் அது பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாறியது.
இந்நிலையில், இந்த பல்நோக்கு மருத்துவமனையே தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் 350 படுக்கைகள் கொண்ட தனித்தனி பிரிவுகள், நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதி, கொரோனா கிருமி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் அனைத்தும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சிறப்பு மருத்துவமனையை தாமே நேரில் சென்று ஆய்வு செய்து திருப்தி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

