கொடைக்கானல்: கொடைக்கானல் மலை கிராமங்கள் வழியாக கேரளாவைச் சேர்ந்த சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றனர்.
அவர்களைக் கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலைக் கிராம மக்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி கிராமங்கள் கேரள மாநில எல்லையில் உள்ளன. கொடைக்கானலில் இருந்து கேரள மாநிலத்தின் மூணாறு பகுதிக்குச் செல்ல திண்டுக்கல் மாவட்டம் கிளாவரை வழியாக இருந்த சாலை வசதி பின்னர் மூடப்பட்டது.
தமிழக-கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மலைக் கிராமங்கள் வழியாக கேரளாவைச் சேர்ந்த சிலர் இப்போது தமிழகப் பகுதிக்குள் ஊடுருவி வருகின்றனர்.
இதனால் கேரளாவில் உள்ள கொரோனா கிருமித் தாக்கம் தமிழகப் பகுதியில் உள்ள கொடைக்கானல் மலைக் கிராம மக்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் நடந்து சென்றால் கேரள மாநில எல்லை உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து காட்டுப்பகுதி வழியாக எளிதில் தமிழக மலைக் கிராமங்களுக்குள் நுழைந்துவிடமுடியும். இதைத்தடுக்க காட்டுவளத் துறையினர் மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடவேண்டும். இதனால் கொரோனா கிருமிப் பாதிப்பைத் தடுக்கலாம் என மலை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

