சென்னை: கொரோனா கிருமி ஏற்படுத்தும் பாதிப்புகள் புரியாமல் மக்கள் அலட்சியமாக அங்குமிங்கும் திரிந்து வருகின்றனர். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் இக்கிருமி மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால் வீடற்றவர்கள், சாலையோர மக்கள், தொழிலாளர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட பலரும் ேபாதிய உணவின்றி அல்லல்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான உணவகங்கள் அமர்ந்து சாப்பிடும் சேவையை நிறுத்திவைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு நடத்திய முதல்வர், உணவின் தரம், ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், "மக்களின் ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். எனவே அரசின் சட்டத்தை மதித்து மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
"கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 17,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு இக்கிருமி பாதிப்பால் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வர்களின் விவரம் தெரியாததால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
"நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் இக்கிருமி பரவலைத் தடுக்கமுடியும். ஒவ்வோர் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்," என்று கூறினார்.

