சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படுவோரையும் அவரது குடும்பத்தினரையும் பார்ப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் அவர் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா கிருமித்தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் உரிய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்புடன் இணைந்து சமூக ஆர்வலர்களும் செயல்படலாம்.
"மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதி, முன்னர் இருந்த 2.30 மணி வரையிலான நேரம் குறைக்கப்பட்டுள்ளது," என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அனைத்து மதத் தலைவர்களும் சமூக தொண்டர்களும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடனும் சென்னையில் மாநகராட்சி ஆணையருடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

