சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக 21 இடங்களில் பரிசோதனை மையங்களை அமைக்க மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் விரைவாக பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்காக 1 லட்சம் பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட இருப்பதாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா கிருமி பரவல் தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 செயற்கை சுவாசம் அளிக்கும் வென்டிலேட்டர் கருவிகள் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
இதுவரை சென்னை விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா கிருமியை ஒழிக்கமுடியும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா கிருமியின் தாக்கம் குறைய தனிமைப்படுத்துவது ஒன்றே தீர்வு என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசிடமிருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி வந்துள்ளது என்றார்.
ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்தால், மாநிலங்கள் இதுதொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தால் தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

