சென்னை: கொரோனா நோய்த்தொற்றால் வரக்கூடிய காய்ச்சல், இருமல் ஆகியவற்றை போக்கக் கூடிய மருந்துகள், நோய் எதிா்ப்பு மருந்துகள் தேவையான அளவுக்கு முழுமையாக கையிருப்பில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கு ஒரு லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வசதி மூலம் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியா்களுடன் அவர் ஆலோசனை நடத்தினாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
"சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக, வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.
"அந்தப் பரிசோதனையின் நேரமே 30 நிமிடங்கள்தான். இந்தக் கருவிகளை சீனாவில் இருந்து (நாளை) 9ஆம் தேதிக்குள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"அந்தக் கருவி கிடைத்தவுடன், வரும் 10ஆம் தேதி முதல் எங்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை விரைவாக நடைபெற வழி வகுக்கப்படும்," என்றார் முதல்வா் பழனிசாமி.
கொரோனா கிருமித்தொற்றின் வீரியம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை கிருமித்தொற்றை தடுப்பதற்கான பணிகளில் அரசு முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 என்றும், மேற்கண்ட பயணிகளில் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை 90,541 என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இவர்களில் 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவு பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 10,814 என்றார் அவர்.
"தமிழகத்தில் இதுவரை ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,612. இதில் இன்று வரை கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 571. கிருமித்தொற்று என சந்தேகிக்கப்பட்டு, உள்நோயாளியாக தனிப்பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,848.
"மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு 22,049 படுக்கைகள் தயார்நிலையில் இருக்கின்றன.
"தடை உத்தரவை கடுமையாக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேட்கிறீர்கள். அரசாங்கம் மக்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது, அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அதே நேரத்தில், இந்தக் கிருமி பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.
"மக்களை கஷ்டப்படுத்தி, துன்புறுத்தி இந்த தடை உத்தரவை அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். சட்டத்தை நாம் போடலாம், ஆனால் அதை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.

