சென்னை: ஊரடங்கை மீறி பலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், மளிகைக் கடைக்குச் செல்வதாகக் கூறி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்வதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசியப் பொருட்கள் ஒருசில கிலோ மீட்டர் தூரத்திலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்றார்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவலின் வீரியத்தை மக்கள் இன்னும் உணரவில்லை எனக் கவலை தெரிவித்த ஆணையர் விஸ்வநாதன், மக்களுக்காக அனைத்துத் துறைகளும் கடுமையாக வேலை செய்து வரும் நிலையில், அதன் வீரியத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழகம் முழுவதும் கைதாகி உள்ளனர்்.

