சென்னை: கொரோனா கிருமித் தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் 47 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாகத் தமிழகத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. எனினும் மாநிலத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அங்கு ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட வடசென்னை பகுதியில் கொரோனா கிருமித் தொற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் பாதிப்பு அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தப் பகுதிகளில் வெளியே நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கின்போது வெளியே சுற்றியவர்கள் மீது சுமார் 93 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. சுமார் 78 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் சுமார் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 58, திண்டுக்கல்லில் 45, நெல்லையில் 38, ஈரோட்டில் 32, திருச்சியில் 17, நாமக்கல்லில் 25, ராணிப்பேட்டையில் 22, செங்கல்பட்டில் 22, மதுரையில் 19, கரூர் 23, தேனி மாவட்டத்தில் 23 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தப்பித்துள்ளது. அங்கு இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

