சென்னை: கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாயைப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கிருமித் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசுக்கு பொதுமக்கள் நிதியளித்து உதவவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளித்து வருகிறார்கள்.
"சிறுவர், சிறுமியர் மாணவர்களும்கூட தங்களால் இயன்ற சிறிய பங்களிப்பை பெரிய மனதுடன் வழங்கி தங்கள் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்," என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிறுதுளி பெருவெள்ளம் என்ற முதுமொழிக்கேற்ப தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்களின் பங்களிப்பைத் தமிழக அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

