சென்னை: கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் விதத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதன் காரணமாக சினிமா தொழிலாளர்கள் உட்பட மாத செலவுக்கு வருமானத்தை நம்பி இருந்த பலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவில் பல்வேறு பிரபலங்களும் உதவித் தொகையை தாராளமாக ஈந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக நடிகா் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார். அதன்படி பிரதமா், முதல்வா் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம், ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், நடனக் கலைஞா்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், தினக்கூலி தொழிலாளா்களுக்கு ரூ.75 லட்சத்தை லாரன்ஸ் வழங்கியுள்ளாா்.
அதேபோல் 'பிகில்' பட இயக்குநர் அட்லியும் தற்போது கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் தருவதாக அறிவித்துள்ளார்.
இவர்களைப் போலவே சாத்தூரைச் சேர்ந்த நகராட்சி ஊழியரும் கொரோனா நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார்.
நகராட்சி ஊழியரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் பாராட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நத்தத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகபாண்டியன் என்பவர் சாத்தூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கொரோனா நிவாரணத் தொகையாக தனது ஒரு மாத ஊதியம் 33 ஆயிரத்தை சாத்தூர் நகராட்சி மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கான காசோலையை சாத்தூர் ஆணையாளரிடம் சண்முகப்பாண்டியன் வழங்கினார்.

