சென்னை: இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்திருப்பது விமானப் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட அந்த விமான நிறுவனத்தின் ஊழியர் கடந்த 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். சுமார் 50 வயதான அந்த ஆடவர் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
"இது எங்கள் அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள நிகழ்வு. பாதிக்கப்பட்ட நபர் குறித்தும் அவரது குடும்பத்தார் குறித்தும் எந்தவித விவரங்களையும் வெளியிட இயலாது.
"அதேசமயம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்," என அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த ஒருவர் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் விமானச் சேவை முடங்கியுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

