சென்னை: பாதிக்கப்பட்ட மக்களின் பசியில் கடவுள் இருப்பதாக தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், இன்றைய தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மேலும் பல உதவிகளை ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"மக்களுக்கு சேவை செய்ய இதுவே தக்க தருணம்," என்று கூறியுள்ள லாரன்ஸ், "நான் ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி அளித்துள்ளேன்.
"இந்த நிதி போதுமானது அல்ல என்பதால் மேலும் பல உதவிகளை இன்றைய தினத்தில் வழங்க உள்ளேன்," என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
"நிவாரண நிதிக்கு நான் அளித்த நன்கொடைக்குப் பிறகு சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் பலர் மேலும் உதவிகள் செய்யுமாறு கோரினர்.
"பொதுமக்களிடம் இருந்தும் வந்துள்ள கடிதங்கள், காணொளி களை எல்லாம் பார்க்கும்போது என் இதயமே நொறுங்கிவிடும்போல இருந்தது. "அவை அனைத்துக்கும் நான் தந்த ரூ.3 கோடி போதாது என்ப தால் நானும் எனது நண்பர்களும் தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் இன்று சில சேவைத் திட்டங் களைச் செயல்படுத்தத் தயாராகி உள்ளோம்," என்றார் லாரன்ஸ்.
இந்நிலையில், "தன்னார்வலர்களோ, தனி நபர்களோ உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது என்ற தமிழக அரசின் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்," என்று இயக்குநருமான லாரன்ஸ் தமிழக முதல் வரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே கொரோனா நிவாரண நிதியாக நடிகர்கள் அஜித் குமார் ரூ.1 கோடியே 25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.35 லட்சம், சிவக்குமார் தன் குடும்பத்தினர் சார்பாக ரூ.10 லட்சம், ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விஜய் சேதுபதி ரூ.10 லட்சம், ஹரீஷ் கல்யாண் ரூ.1 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் ரூ.10 லட்சம், பிரகாஷ்ராஜ் 25 கிலோ எடையுள்ள 150 அரிசி மூட்டைகளையும் வழங்கி உள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரி வித்துள்ளன.

