துடியலூர்: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஆடவருடன் தொடர்பில் இருந்த 40 போலிசாருக்கும் இந்தக் கிருமி தொற்றியுள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த 61 வயது ஆடவர், கடந்த 23ஆம் தேதி டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அவருக்கு இருமுறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து அவர் கடந்த சில தினங்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துடியலூர் போலிசாருக்கும் அங்குள்ள சிலருக்கும் உணவு விநியோகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அந்த 61 வயது நபருக்கு 3வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்த 40 போலிசாருக்கும் இந்தக் கிருமி பாதிப்பு உள்ளதா என நேற்று செவ்வாய் முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். துடியலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அத்துடன் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என 120 பேருக்கும் பரிசோதனை தொடர்கிறது.

