கொவிட்-19: செய்திக்கொத்து - 15-04-2020

3 mins read
cbf7e420-7c49-46eb-ac7c-afdf253978e6
மக்களின் வசிப்பிடங்களைத் தேடி 287 வாகனங்களில் நடமாடும் கடைகள் வாயிலாக காய்கறிகள் விற்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். இருப்பினும் மக்கள், குறைந்த விலையில் நிறைய காய்கறிகள் வாங்கலாம் என சந்தையைத் தேடி வருகிறார்கள். படம்: ஏஎப்பி -

கொரோனா கிருமி பரிசோதனை முடிவு தெரியாமல் மக்கள் குழப்பம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்கள் 15 பேருக்கு இதுவரை கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 15 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யாரென கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளதால் சம்பந்தப்பட்டோர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

மக்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லும் 287 காய்கறி வாகனங்கள்

சென்னை: மக்களின் வசிப்பிடங்களைத் தேடி 287 வாகனங்களில் நடமாடும் கடைகள் வாயிலாக காய்கறிகள் விற்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். "ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 287 வாகனங் களில் மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறி கள் தடையின்றி விற்கப்படுகின்றன. மேலும் 72 பண்ணை பசுமைக் கடைகள் வாயிலாகவும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது," என்றார் ராஜு.

கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை

சென்னை: மக்களுக்கு உதவும் வகையில் சமையல் பொருட்கள், காய்கறிகள், உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க முன்வரும் தன்னார்வலர்கள் 24 மணி நேரத்திற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற்று, அலுவலர்கள் முன்னிலையில் பொருட்களை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கும்போது தாங்கள் சார்ந்துள்ள அமைப்பு, அரசியல் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.21,000 உண்டியல் சேமிப்பை நன்கொடை வழங்கிய சகோதரிகள்

ஆம்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த சகோதரிகள் தியா, ஹர்னா, டியாரா ஆகியோர் தங்களது உண்டியல் சேமிப்புத் தொகையான ரூ.21,000 பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். ஆம்பூரில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆட்சியர் சிவன் அருளிடம் இந்தப் பணத்தை அவர்கள் நேரில் சென்று வழங்கினர்.

மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் விநியோகம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கும் விதத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 1800 1212 172 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இச்சேவையை துவங்கிவைத்து பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மனோகரன், தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 10,000 மருந்தகங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் ஓரிரு நாட்களில் 40,000 மருந்தகங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.

ரூ.30 லஞ்சம்; தபால்காரர் இடைநீக்கம்

திருப்பூர்: ஊத்துக்குளியில் 96 வயது முதியவருக்கு உதவித் தொகை வழங்க ரூ.30 லஞ்சம் வாங்கியதாக தபால்காரர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே வெள்ளிரவெளியைச் சேர்ந்தவர் மினியன், 96. அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெற்று வருகிறார். இம்மாதத்துக்கான உதவித் தொகையை வாங்க வெள்ளிரவெளியில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்றபோது, தபால்காரர் ராஜு என்பவர் 1,000 ரூபாய் கொடுத்துவிட்டு ரூ.30 லஞ்சமாக கேட்டு வாங்கியுள்ளார். இதுகுறித்த காணொளி வெளியானதால் ஈரோடு தபால் கோட்ட கண்காணிப்பாளர் முஷீர் பாட்ஷா தபால்காரர் ராஜுவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.