ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தத்தளிப்பதாக அன்புமணி கவலை
சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். எனவே, ஆயிரம் யூனிட்டிற்கான மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். "ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் மக்கள் அடைந்து கிடப்பதால், மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்து இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும்? என அரசு சிந்திக்க வேண்டும். "எனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 500 யூனிட் வீதம் 2 மாதத்திற்கு 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்," என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சியவர் அதிரடி கைது: 300 லிட்டர் பறிமுதல்
சிவகங்கை: மானாமதுரை அருகே அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டு 300 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் போலிசார் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைதானார். ஊரடங்கு உத்தரவையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். இந்நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழமாயாளி கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகப் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிசார் அங்குள்ள முந்திரி தோப்பில் நுழைந்து சோதனையிட்ட போது, அங்கு ராமு என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
"கொரோனா கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இயல்பாகவே உள்ளது"
சென்னை: கொரோனா கிருமித்தொற்றை எதிர்க்கும் ஆற்றல் இந்திய மக்களுக்கு இயல்பாகவே உள்ளது என கொசுத் தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் தெரிவித்துள்ளார். எனவேதான் கிருமித்தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "கொரோனா கிருமி ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் ஏற்படுத்தியதைப் போன்ற தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தாமைக்கு முக்கியக் காரணம், தட்பவெப்பநிலையும், இங்குள்ள மக்களின் உடம்பில் உள்ள இயல்பான மரபணு அமைப்பும்தான். மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருப்பதும் மற்றொரு காரணம்," என மாரியப்பன் மேலும் கூறியுள்ளார்.
நீதிமன்றம்: அனுமதி தேவையில்லை; தகவல் தெரிவித்தால் போதும்
சென்னை: கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக, தமிழக அரசின் உத்தரவுப்படி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னார்வலர்களும் இதர அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை நேரடியாக பொது மக்களுக்கு வழங்கக் கூடாது என்றும், பொருட்களை வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இதை எதிர்த்து திமுக வழக்கு தொடுத்தது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம்தான் முதலில் செயல்பட்டது: முதல்வர் பழனிசாமி விளக்கம்
சென்னை: நோய்த் தடுப்புப் பணிதான் மிகவும் முக்கியம் என்றும், அதில்தான் தமிழக அரசு முழு கவனம் செலுத்தியுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலில் மேற்கொண்டது தமிழகம் தான் என்றார். "தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொவிட் 19 நோய்த் தடுப்புப் பணிகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஜனவரி 31ஆம் தேதியே ஆணை பிறப்பிக்கப்பட்டது. "இதற்காக ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதலே விமான நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் கொவிட் 19 நோயாளி மார்ச் 7ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார்," என்றார் முதல்வர் பழனிசாமி.

