சென்னை: கொவிட்-19 கொடுந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதையடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதியளித்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை வரை ரூ.135 கோடி நிதி திரண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் நிவாரண நிதிக்குப் பொது மக்கள், திரையுலகப் பிரபலங்கள், வர்த்தக, தொழில் நிறுவனங்கள் சார்பில் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 134 கோடியே 63 லட்சம் நன்கொடையாக வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள ஏழைகளுக்கும் உதவும் வகையில் நிதி திரட்டுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை ஈரோடு போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னிமலையைச் சேர்ந்த 31 வயதான சதீஷ்குமார் தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
கடந்த வாரம் இவரை கைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு, அவரது தலைமையில் நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனை சார்பில் நிதி வழங்குமாறு அந்த நபர் கேட்டுக் கொண்டதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதி திரட்டித் தருவதாகக் கூறினார் சதீஷ்குமார்.
இதையடுத்து நிவாரண நிதியைப் பெற மூன்று பேர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி குறித்து பேசியபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்த மூவர் மீதும் சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட, போலிசுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலிசார் விசாரணைக்குப் பின் மூவரையும் கைது செய்தனர்.

