சென்னை: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் இதுவரை கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,520ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டங்களில் கிருமித்தொற்றால் அதிகம் பாதிப்பட்டிருப்பது சென்னைதான். எனவே அங்கு கொரோனா கிருமித்தொற்றுப் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கு நாட்களில் சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கிருமித்தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. திருப்பத்தூரில் 109, திண்டுக்கல்லில் 76, திருவள்ளூரில் 48, நாகையில் 44, விழுப்புரத்தில் 36, தூத்துக்குடி, திருவாரூரில் தலா 27, தென்காசியில் 26, சிவகங்கையில் 12, ராமநாதபுரத்தில் 11, பெரம்பலூரில் 5, அரியலூரில் 4 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 2.6 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கு தொடர்பில் கைதான அத்தனை பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 2.19 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

