சென்னை: தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார்.
"ஆந்திர அரசு வாங்கிய ரேபிட் கிட் சோதனைக் கருவிகளின் விலை தமிழகத்தைவிட அதிகம். ஆந்திர அரசு ரேபிட் கருவிகளை கொள்முதல் செய்ததற்கு அம்மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் நிலைமை நேர்மாறாக உள்ளது.
"புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூகத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

