சென்னை: மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அப்பொருட்களை பெறுவதற்கு ஏதுவாக வீடுதோறும் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதையடுத்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்குகிறது தமிழக அரசு.
இப்பொருட்களைப் பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கும் பணி நடைபெறும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அந்த டோக்கன்களில் ரேஷன் பொருட்கள், வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் பொருட்கள் வழங்கப்படும் கடைக்குச் சென்று அவற்றைப் பெறலாம் என்று கூறியுள்ளார். பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

