சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது என்றும் கொரோனா ஒழிப்புப் போரில் நல்ல நம்பிக்கை ஏற்படும் வாய்ப்பு கூடி இருக்கிறது என்றும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அந்த மாநிலத்தில் இதுவரையில் 1,629 பேருக்கு கொரோனா கிருமி தொற்றி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கிருமி புதன்கிழமை 33 பேரைத்தான் தொற்றியது.
அதற்கு முன் மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கொரோனா கிருமி தொற்றியவர்களில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பி இருப்போரின் அளவு ஏறக்குறைய 41 விழுக்காடாக இருக்கிறது. இது மிகப் பெரிய முன்னேற்றமாகத் தெரிவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மொத்தம் 662 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கொரோனா கிருமி தமிழகத்தில் 18 பேரை பலிவாங்கி இருக்கிறது. மரண விகிதம் 1.5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கிறது.
மொத்தம் 111,478 பயணிகள் 28 நாட்களுக்கு வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கொரோனா கிருமி அதிகம் பாதித்து இருக்கும் நாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 155 பேரின் உடலில் எந்தவித கிருமித்தொற்று அறிகுறியும் தெரியவில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக கிருமித்தொற்றிய 33 பேரில் நான்கு பேர் செய்தியாளர்கள். ஆறு பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள். 12 வயதுப் பையனும் கிருமித்தொற்றுக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று சூழலை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
மாநிலத்தில் 59,023 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 49,506 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் தான் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகள் அதிகளவில் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக முதல்வர் பழனிசாமி நேற்று பெருமைப்பட கூறினார்.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

