சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மே 3ஆம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு மீட்டர் இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரப் பணி ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கொரோனா கிருமித்தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட ஆலைகளைக் கட்டம்கட்டமாக மறுபடியும் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
முதல்வர் பழனிசாமி நேற்று காணொளி மூலம் தொழில்துறை தலைவர்களுடன் பேசியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுத்திகரிப்பு ஆலைகள், இரும்பு தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள், கரும்பு ஆலைகள், டயர் மற்றும் காகிதத் தயாரிப்பு ஆலைகள் போன்றவை மறுபடியும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை எல்லாம் மத்திய அரசாங்கத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டம் கட்டமாகச் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப் பிடப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப இதர ஆலைகளுக்கும் அனுமதி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது.

